உலக இதய தினம்-செப்டம்பர் 29 | இதய பாதுகாப்பு மற்றும் உணவு முறைகள்-World Heart Day
வாழ்க்கை முறை
உங்கள் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் இதயத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையைத் தேர்வுசெய்யுங்கள். அமெரிக்க இதயச் சங்கம் புகைபிடிப்பதுதான் இதய நோயிற்கு முக்கியக் காரணம் என தெரிவித்துள்ளது. ஆதலால் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். கூடுதலாகப் புகைபிடிப்பது நுரையீரல் நோயை ஊக்குவித்து, தடிப்பு ஏற்படுவதன் மூலம் இதயம் பாதிப்படைகிறது. புகை பிடிப்பது பக்கவாதம், வெளிப்புற தமனி நோய், அயோர்டிக் குருதி நாள நெளிவு போன்ற ஆபத்தை ஏற்படுத்துகிறது.
உணவுக் கட்டுப்பாடு இதய ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உயர் இரத்தக் கொழுப்பின் அளவு தமனியில் உள்ள பிளேக் கட்டமைப்பை அதிகரிப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுகிறது. குறைந்த கொழுப்புச் சத்துள்ள உணவுகளான மீன், கொழுப்பில்லாத் பால், பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு, முட்டையில் வெள்ளைக் கரு போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஃபைபர், போன்றவை இதயப் பாதுகாப்பிற்கான முக்கிய ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கின்றன.
எடை பராமரிப்பு
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதில் கவனம் வேண்டும். உடல் பருமனாக இருந்தால் கரோனரி இதய நோய் மரணத்தை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கன் ஹார்ட் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. 30 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் குறிப்பாக எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.. பருமனான உடல் கொண்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள், கெட்ட கொழுப்பு, குறைவான ஹெச்டிஎல் போன்றவை இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான எடை மற்றும் ஆரோக்கியமான மனதைப் பராமரிக்க வேண்டும்.
உடற்பயிற்சி
ஆரோக்கியமான இதயத்திற்கு தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஒட்டமைப்பு மற்றும் தசைகள் வலுவடைகின்றது. நடைபயிற்சி, நெடுந்தூர நடை, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை ஆரோக்கிய இதயத்தை மேம்படுத்த சிறந்த வழிகள். தினமும் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளான நாயுடன் நடைபயிற்சி, மாடிப்படி ஏறும் பயிற்சி, வெகு தொலைவில் இருக்கும் கடை, போன்றவைகளுக்காக உங்களது காரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு உங்களது கால்களை பயன்படுத்துங்கள் இது ஆரோக்கிய இதயத்திற்குச் சிறந்த பங்களிப்பாகும்.
ஆபத்து அறிகுறிகள்
அசெளகரியமான உணர்வு, மார்பு மையப்பகுதியில் அழுத்தம், முழுவதுமாக அழுத்தம் மற்றும் வலி, இரண்டு கைகளிலும் வலி, தாடை, கழுத்து அல்லது வயிறு போன்ற பகுதிகளில் அழுத்தத்துடன் கூடிய வலி ஏற்படும். மூச்சுத் திணறல், குளிர்ந்த வியர்வை, குமட்டல், இலேசான மயக்கம், போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். திடீரென ஏற்படும் ஸ்ட்ரோக், திடீர் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.
இதய நோய் வந்த பிறகு குணப்படுத்துவதைவிட, வருமுன் காப்பதே சலச் சிறந்தது. வாழ்க்கை முறையில் ஏற்படுத்தும் மாற்றங்களே இதய நோயைத் தவிர்க்கச் சிறந்த வழி.
உடம்பெங்கும் ரத்தத்தை அனுப்பும் மையமான இதயத்தின் நலம் காப்பது மிகவும் முக்கியம். அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...
- புகை, மதுப் பழக்கம் இருந்தால் உடனே அவற்றை உதற வேண்டும்.
- உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- சர்க்கரை நோய் ஏற்படாமல் வருமுன் காக்கவும், அந்நோய் இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் வேண்டும்.
- உடல் எடையை சீராகப் பராமரிக்க வேண்டும். உடல் எடை அதிகமாக இருந்தால் தகுந்த உடற் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் சரிசெய்ய வேண்டும்.
- அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- சுறுசுறுப்பான உடலுழைப்பு மற்றும் செயல்பாடு இருந்தால் ரத்த ஓட்டம் உடலில் சீராக நடைபெறும். வாரத்தில் 5 நாட்களாவது துரிதமான நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மூலம் இதயத்தின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தி ரத்த ஓட்டத்தின் சிறு தடைகளை நீக்கி, அதைச் சீராக்க வேண்டும்.
- இதயத்துக்கு இதமான உணவு வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கடல் உணவுகள், சோயா பீன்ஸ், முழு கடலை, வேர்க் கடலை போன்றவற்றையும், பச்சைக் காய்கறிகள், கீரைகளையும் அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வது இதய ரத்தக்குழாய் மற்றும் உடலின் எல்லா உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
- இவை எல்லாவற்றையும் தாண்டி, மன ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் காக்கும். மனதை மகிழ்ச்சியாகவும், நேர்மறை எண்ணங்களுடனும் வைத்துக்கொள்வது இதயத்துக்கு நன்மை புரியும்.